காட்டெருமை தாக்கி பம்பு ஆபரேட்டர் பலி


காட்டெருமை தாக்கி பம்பு ஆபரேட்டர் பலி
x
தினத்தந்தி 23 March 2021 4:47 AM IST (Updated: 23 March 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பம்பு ஆபரேட்டர் பலியானார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பனஹட்டியை சேர்ந்தவர் சந்திரமோகன்(வயது 42). கக்குச்சி ஊராட்சியில் பம்பு ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராசாத்தி(35). இவர்களுக்கு 15 வயது மகளும், 12 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்காக தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள சம்பந்தப்பட்ட மோட்டார் அறைக்கு சென்றார். 

அப்போது அங்குள்ள புதர் மறைவில் நின்றிருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை நோக்கி ஓடி வந்தது. இதை சற்றும் எதிர்பாராத சந்திரமோகன் தப்பி ஓட முயன்றார். எனினும் துரத்தி வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே சந்திரமோகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் வந்தனர். அப்போது மோட்டார் அறைக்கு அருகில் காட்டெருமையால் தாக்கப்பட்டு அவர் இறந்து கிடப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கட்டபெட்டு வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவின்பேரில் சந்திரமோகனின் குடும்பத்தினரிடம் முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமை அட்டகாசம் அதிகரித்து உள்ளது. எனவே அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story