அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
கக்குச்சி அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கோத்தகிரி,
ஊட்டி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சி பில்லிக்கம்பையில் உள்ள சக்தி நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மின் அழுத்த பிரச்சினை காரணமாக அடிக்கடி மின்வெட்டு நிகழ்வதால், இரவில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கையில் கருப்பு கொடியுடன் மக்கள் திரண்டனர். பின்னர் அடிப்படை வசதி கேட்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கக்குச்சி ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் பரிமளா ஆகியோர் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேசினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறினர்.
இதையடுத்து அங்கு ஊட்டி தாசில்தார் குப்புராஜ் வந்தார். பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 6 மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story