பா.ஜனதா வேட்பாளர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
கோவை தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் காரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கோவை,
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டத் தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 120 பறக்கும் படை மற்றும் நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.56 லட்சம் வெளிநாட்டு மதுபானஙகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி பறக்கும்படையினர் அதிகாரி சாமிநாதன் தலைமையில் ரெட்பீல்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரசாரம் செய்துவிட்டு காரில் வந்தார்.
உடனே அதிகாரிகள் அவருடைய காரை தடுத்து நிறுத்தி அதற்குள் சோதனை செய்தனர். காருக்குள் பணம் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என இருக்கைகளின் அடிப்பகுதி மற்றும் பின்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையின்போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கவில்லை. இதையடுத்து அவர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த சோதனை காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story