அஞ்செட்டி அருகே மயான வசதி கோரி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு - பேனர் வைத்து கருப்புக்கொடி கட்டியதால் பரபரப்பு


அஞ்செட்டி அருகே மயான வசதி கோரி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு - பேனர் வைத்து கருப்புக்கொடி கட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 March 2021 5:49 AM IST (Updated: 23 March 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மயான வசதி இல்லாததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து பேனர் வைத்து கருப்புக்கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் அஞ்செட்டி தாலுகாவில் உள்ளது அத்திமரத்தூர் மலைக்கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக மயான வசதி செய்து தரும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். 

மேலும் அத்திமரத்தூர், ஆரோக்கியபுரம் ஆகிய கிராமங்களை நாட்ராம்பாளையம் வருவாய் கிராமத்துடன் இணைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராமமக்கள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று ஊர் எல்லையில் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர். அதில், மயான வசதி செய்து தர வேண்டும். அத்திமரத்தூர், ஆரோக்கியபுரம் ஆகிய கிராமங்களை நாட்ராம்பாளையம் வருவாய் கிராமத்துடன் இணைக்க வேண்டும். அரசியல் கட்சியினர் யாரும்  ஓட்டு கேட்டு ஊருக்குள் வர வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் அத்திமரத்தூர் கிராமத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து கிராம மக்கள் கருப்புக்ெகாடி ஏற்றியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story