வேப்பனப்பள்ளி அருகே, தனியார் கல்லூரி பேராசிரியைக்கு கொரோனா - மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு
வேப்பனப்பள்ளி அருகே தனியார் கல்லூரி பேராசிரியைக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியரின் மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பேராசிரியைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும், அவரது கணவர் பணிபுரியும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் பேராசிரியை பணிபுரிந்து வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்த பேராசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story