ஏழை, எளிய மக்கள் 5 ஆயிரம் பேருக்கு வீடு கட்டி தரப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி
ஏழை, எளிய மக்கள் 5 ஆயிரம் பேருக்கு வீடு கட்டி தரப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்.
கரூர்,
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று ராயனூர் காலனி, அன்புநகர், பாரதிநகர், எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:
பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கியவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா. பெண்களுக்காக வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மற்றும் வாசிங்மெஷின் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்து உள்ளார். மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.
இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்காக ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.2,500 வழங்கப்பட்டது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. மேலும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட இயலாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும். ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச முதியோர் இல்லம் தொடங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி படிப்பு முடிந்து ஒரு வருடம் வரை உதவித்தொகை வழங்கப்படும். கருர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஏழை, எளிய மக்கள் 5 ஆயிரம் பேருக்கு வீடு கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story