கரூர் தொகுதியில் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை - வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி


கரூர் தொகுதியில் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை - வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி
x
தினத்தந்தி 23 March 2021 9:48 AM IST (Updated: 23 March 2021 9:48 AM IST)
t-max-icont-min-icon

கரூர் தொகுதியில் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.

க.பரமத்தி,

கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி கரூர் மத்திய நகரத்திற்கு உட்பட்ட 31வது வார்டு பெரியார் நகர், லட்சுமிபுரம் தெற்கு, காந்திநகர், திருப்பதி லேஅவுட், சுப்பையா லேஅவுட், சின்ன ஆண்டாள் கோவில் ரோடு, அண்ணாநகர், கௌரிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்களும், பெண் குழந்தைகளும் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் வீடு, வீடாக சென்று முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 

கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் சட்டக்கல்லூரியில் படிப்பதற்கு திருச்சி, கோவை, சேலம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே மாணவமாணவிகளின் கனவான சட்டக் கல்லூரியை கரூர் தொகுதியில் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். மேலும் படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மாநில, மத்திய அரசின் பணியாளர் தேர்வுகள், வங்கித்தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி,  யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் அனைத்திற்கும் இலவசமாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். 

அதற்கு தேவையான புத்தகங்களை இலவசமாக கிடைக்க வழிவகை செய்யப்படும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும். அதனை அப்புறப்படுத்தும் எந்திரங்கள் நிறுவப்படும். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். எனது வாழ்நாளை கரூர் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிப்பேன். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story