அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தி.மு.க.வினர் சாலை மறியல்
தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கரூரில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்,
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித், கார்த்திக். இவர்கள் தி.மு.க. நிர்வாகிகள் ஆவர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த ரஞ்சித், கார்த்திக் ஆகியோரை அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் சேர்ந்து வழிமறித்து தாக்கி உள்ளனர்.
இதனால் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து ரஞ்சித் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், கார்த்திக் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டு ரஞ்சித், கார்த்திக்கை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று காலை வெங்கமேட்டில் உள்ள கரூர்-வெங்கமேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்து கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதி பொதுமக்களிடம் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். பின்னர் போலீசார் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வி.செந்தில்பாலாஜியிடம் உறுதியளித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story