ஸ்ரீரங்கம்நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் - மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் வாக்குறுதி
விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ஸ்ரீரங்கம்நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் வாக்குறுதி அளித்தார்.
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மாதவ பெருமாள் கோவில், நொச்சியம் கடைவீதி, இந்திரா நகர், ராம் நகர், மாரியம்மன் நகர், கூட்டப்பள்ளி, மணிமங்கலம், திருவாசி, சிலையாத்தி, துடையூர், மேல்பத்து, சுனைபுகநல்லூர், நெய்வேலி, செட்டிமங்கலம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் மக்களை புதுவிதமாக கவர்வதற்காக வேட்பாளர் கதிரவன், மோட்டார் சைக்கிளில் சென்றும், தேநீர் கடையில் தேநீர் அருந்தியும், இளைஞர்களுக்கு கை கொடுத்தல், செல்போனில் செல்பி எடுப்பது போன்றவற்றால் இளம் தலைமுறையினரை கவர்ந்து வரவேற்பை பெற்றார்.
இதையடுத்து நொச்சியம் பகுதியில் திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் எஸ்.கதிரவன் பேசுகையில், மத்திய பா.ஜ.க., மாநில அ.தி.மு.க. ஆட்சிகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அனைத்து தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை வீசுகிறது. அவர் முதல்- அமைச்சரானால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றுவார். இத்தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களையெல்லாம் இத்தொகுதிக்கு பெற்றுத் தருவேன். மண்ணச்சநல்லூர் தொகுதியில் விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்து செல்லவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும் ஸ்ரீரங்கம்நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றில் விரைவில் தரைப்பாலம் அமைத்துக் கொடுப்பேன் என்று கூறினார்.
மேலும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலம் அமைக்க ரூ.25 கோடி நிதி ஆகும் என்றனர். தற்போது அது ரூ.50 கோடி தேவைப்படும். மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம் என்றால் அதனை நிச்சயமாக செய்து முடிப்பேன். அதற்கு முதன்மை செயலாளர் கே.என்.நேருவும் உதவி செய்வார். எனவே எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின்போது தி.மு.க.வின் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story