திருவள்ளூர் அருகே, காற்றாலை இறக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திருவள்ளூர் அருகே காற்றாலை இறக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை இறக்கை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன குடோன் அருகே உள்ள கழிவுப்பொருட்கள் சேமித்து வைக்கும் இடத்தில் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மற்றும் பேரம்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீவிபத்தில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்ததில், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கல்லாமேடு காலனியை சேர்ந்தவர் சின்னப்பன். (52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது இரவு 7 மணி அளவில் இவரது குடிசை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைப்பதற்குள் குடிசை வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா? என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story