‘பா.ம.க. தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம்’ மயிலத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இல்லை, பா.ம.க. தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம் என்று மயிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சிவக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று வெள்ளிமேடுபேட்டை, நாட்டார்மங்கலம் கூட்டுரோடு பகுதியிலும், செஞ்சி பா.ம.க. வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து வளத்தி, அவலூர்பேட்டையிலும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-
மாம்பழத்துக்கு வாக்களியுங்கள்
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டம் கல்வியில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால், ஏழ்மை, வறுமை, சாராய விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. குடிசைகளும் இங்கு தான் அதிகம்.
சென்னையில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்தும் மற்றும் காவலாளிகள் போன்ற சிறு சிறு தொழில்கள் செய்பவர்கள் நம் மாவட்டத்தில் இருந்து சென்றவர்கள் தான். இந்த மாவட்டத்தில் பிழைக்க வழியில்லாமலும், அங்கு சென்றும் முன்னேற முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் நீங்கள் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
பா.ம.க. மற்றும் அ.தி.மு.க., பா.ஜனதா, த.மா.கா., கூட்டணி கட்சியினர் ஒவ்வொரு ஊராட்சியாக பிரித்து கொண்டு வீடுவீடாக சென்று மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து சிவக்குமாரை வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.
மாணவிகளுக்கு மோட்டார் சைக்கிள்
பெண்கள் இந்த நாட்டின் கண்கள். பெண்கள் தான் எப்போதும் எதிலும் மெஜாரிட்டி ஆனவர்கள். ஆண்கள் மைனாரிட்டிதான். பெண்கள் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. முன்னூறு நாள் சுமந்து உயிரை தரவில்லை என்றால், இந்த உலகத்தில் மனித உயிர்கள் இல்லை.
அப்படிப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு வாஷிங் மெஷின், சூரிய ஒளி அடுப்பு மாதம் 1,500 ரூபாய், வருடத்துக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக தரப்பட உள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும்.
மின்வெட்டு இல்லை
விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணை பலப்படுத்தப்படும், விவசாய கல்லூரி, மகளிர் கல்லூரி அமைக்கப்படும். கூட்டேரிப்பட்டு பகுதியில் பாலம் அமைக்கப்படும். கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் செயல்படுத்தப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் விதைகள், உரங்கள் வாங்குவதற்கு உதவும்படி வழங்கப்படும். 5 ஆண்டில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். நீங்கள் கடன் சுமை இல்லாமல் இருப்பதற்கு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இருந்தது, ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருக்கிறது. பா.ம.க. தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய நீங்கள் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story