ரூ.200 கோடி பதுக்கல்: ‘ பணத்தை வாங்கிக் கொண்டு கதையை முடித்து விடுங்கள் ’ விழுப்புரம் தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேச்சு
விழுப்புரம் தொகுதியில் ரூ.200 கோடி பதுக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை வாங்கிக் கொண்டு கதையை முடித்து விடுங்கள் என்றும் தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது விழுப்புரம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம், செஞ்சி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கவுதம்சாகர் ஆகியோரை ஆதரித்து குக்கர் சின்னத்திலும், மயிலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுந்தரேசன், வானூர் (தனி) தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கணபதி, திண்டிவனம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரலேகா ஆகியோரை ஆதரித்து முரசு சின்னத்திலும் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தல் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாகிய நமக்கும், தீயசக்தி என்று எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட தி.மு.க.வுக்கும், துரோக கம்பெனியான பழனிசாமி கம்பெனிக்கும் நடக்கிற தேர்தல். மக்களையும், தொண்டர்களையும் நம்பி அ.ம.மு.க. தேர்தலில் நிற்கிறது.
இங்கு ஒருத்தர் இருக்கிறார், அவர் தள்ளாடி கொண்டுதான் நிற்பார். உண்மையை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. கோபம் உடலுக்கு ஆகாது தம்பி, என்ன பேச்சு பேசுகிறீர்கள் தம்பி. நார்மலாக இருந்து கோபம் வந்தால் பரவாயில்லை, தள்ளாடிக்கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் உடலுக்கு ஆகாது.
ரூ.200 கோடி பதுக்கல்
நமது இலக்கு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதுதான். இந்த தொகுதியில் ரூ.200 கோடியை பதுக்கி வைத்துள்ளனர். இது யாருடைய பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம். பணம் உங்களை தேடி வரும். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், நான் ஊர்ந்து செல்ல பல்லியா, பாம்பா என்கிறார், நீங்கள் பச்சோந்தி. நீங்கள் எப்படி சென்றீர்கள் என்பதை தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களும் பார்த்திருக்கிறார்கள். வாயை திறந்தால் பொய்யைத்தான் பேசுகிறார். இன்னும் சில நாட்களில் எனது பெயர் பழனிசாமியே இல்லை என்பார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் போன்று ரூ.6 ஆயிரம் கொடுப்பார்கள், அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்.
மக்கள் தீர்மானிக்க வேண்டும்
இன்னொருவர் விடியலை தரப்போகிறேன் என்று சொல்கிறார், யாருக்கு விடியல் தரப்போகிறார். நீட் தேர்வு வருவதற்கு காரணமே கருணாநிதி, அதுபோல் காவிரி பிரச்சினை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை வரவேற்றது தி.மு.க., இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி பேசுவார்கள், ஆளும்கட்சியாக இருக்கும்போது மாறி விடுவார்கள்.
உங்களை ஏமாற்றவே பழனிசாமியும், ஸ்டாலினும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். இருவருமே ஆட்சிக்கு வரப்போவதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான, வெளிப்படையான, உண்மையான நிர்வாகத்தை கொண்டு வருவோம். அனைத்து சமுதாய மக்களும் சமூக நீதியும், சம உரிமையும் பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து காணையில் விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் அய்யனாரை ஆதரித்தும், திருக்கோவிலூரில் திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்தும், பகண்டை கூட்டுசாலையில் ரிஷிவந்தியம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பிரபுசிவராஜை ஆதரித்தும் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
Related Tags :
Next Story