விக்கிரவாண்டியில் கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைப்பு: கேரளாவில் பதுங்கிய பெண், கள்ளக்காதலனுடன் கைது


கைதான ராதாகிருஷ்ணன்
x
கைதான ராதாகிருஷ்ணன்
தினத்தந்தி 23 March 2021 11:02 PM IST (Updated: 23 March 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, கேரளாவில் பதுங்கிய இளம்பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் லியோபால் (வயது 33). வேன் டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த மாதம் 3-ந்தேதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனாரை செல்போனில் தொடா்பு கொண்டு, புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்போது நான் நேரில் வருகிறேன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் அவரது மாமனார். 

வீட்டு தோட்டத்தில் உடல் புதைப்பு

அதன்படி சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு காணவில்லை. குழந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் சகாயராஜிக்கு தனது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது, அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோண்டியபடி கிடந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தை போலீசார், தோண்டி பார்த்த போது லியோபால் புதைக்கப்பட்டு பிணமாக கிடந்தார். 


படம் விளக்கம்:- கொலை செய்யப்பட்ட லியோபாலுடன் உள்ள அவரது மனைவி சுஜித்ராமேரி.
-----------------------------------------------------------------

கல்லூரி மாணவனுடன் கள்ளக்காதல்
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேந்திரன் மகன் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 

தற்போது ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே, அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. 

கேரளாவில் பதுங்கல்

இதுகுறித்து சகாயராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு அவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து, விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்தனர். தொடா்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



‘ஏற்கனவே ஒருவரை அடித்துக் கொன்ற பாணியை பின்பற்றினேன்’
போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த கள்ளக்காதலன்


கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளக்காதல் ஜோடி சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் லியோபால் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து  போலீசில் வாக்குமூலம் அளித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

வேன் டிரைவரான லியோபாலுக்கு, உடலில் டாட்டு வரையும் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை கற்றுக்கொள்வதற்காக அடிக்கடி அவர் சென்னைக்கு சென்று வந்தார். அதாவது கடந்த 6 மாதமாக இந்த தொழிலை கற்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 
இந்த சூழ்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுஜித்ரா மேரிக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது.

இரும்பு ராடால் அடித்துக் கொன்றோம்

ஒரு கட்டத்தில் எங்களது கள்ளக்காதல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே அவர் எங்களை கண்டித்தார். இதையடுத்து அவரை தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்தோம். 

சம்பவத்தன்று இரவு லியோபால், குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் இருவரும் சேர்ந்து இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தோம். பின்னர் வீட்டு தோட்டத்தில் பள்ளம் தோண்டி இரவோடு இரவாக புதைத்து விட்டு, எதுவும் தெரியாதது போன்று இருந்து விட்டோம். 

ஏற்கனவே ஒருவர் கொன்று புதைப்பு

மேலும் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லியோபால் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து நான் மது குடித்தேன். அப்போது ஏற்பட்ட தகராறில் லியோபாலும், நானும் சேர்ந்து அந்த நண்பரை இதே பாணியில் அடித்துக் கொலை செய்து, அந்த பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தோம். அதுபற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. 

எனவே அதே பாணியை பின்பற்றலாம் என்று எண்ணி, லியோபாலை கொலை செய்து நானும் சுஜித்ரா மேரியும் சேர்ந்து புதைத்தோம். தற்போது எப்படியோ போலீசில் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்தனர். 

யார் அவர்?

லியோபால் கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ராதாகிருஷ்ணன் ஏற்கனவே நாங்கள் ஒருவரை கொன்று புதைத்துள்ளோம் என்று தெரிவித்து இருப்பது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதன் மூலம் கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எங்கு புதைக்கப்பட்டு உள்ளார்? என்று ராதாகிருஷ்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
உடல் அடையாளம் காணப்பட்டு தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே, இந்த கொலை குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.




Next Story