குமரியில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்களால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு குமரி மாவட்ட எல்லையில் 3 இடங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் நடமாடும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு முக கவசம் அணியாதவர்கள் மீது ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. முக கவசம் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் சுகாதாரத்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.
26 பேர் பாதிப்பு
ஏன் எனில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது அகஸ்தீஸ்வரம் 12, குருந்தன்கோடு- 1, மேல்புறம்- 1, ராஜாக்கமங்கலம்- 2, தோவாளை- 2, தக்கலை- 2 மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியில் 6 பேர் என மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 839 ஆக உயர்ந்து உள்ளது.
கிருமிநாசினி தெளிப்பு
நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேப்பமூடு பூங்காவுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வதால் அங்கு நேற்று பெரிய வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதே போல ஒரு கல்லூரியிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story