உரிய ஆவணங்கள் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் ரூ.11 லட்சம் பறிமுதல்


உரிய ஆவணங்கள் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் ரூ.11 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2021 1:51 AM IST (Updated: 24 March 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

மலைக்கோட்டை, 

திருச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி கிழக்கு

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படை அதிகாரி சுமதி தலைமையிலான குழுவினர் திருச்சி ஜே.கே.நகர் பகுதியில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து சோதனை செய்தனர்.

சோதனையில், அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை, திருச்சி கிழக்கு தாசில்தார் குகனிடம் ஒப்படைத்தனர்.

திருவெறும்பூர்

திருச்சி காட்டூரில் ஆயில் மில் அருகே உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தியதில் அதில் ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். இதனை திருவரம்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

காட்டுப்புத்தூர்

முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் அருகிலுள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். 

சோதனையில், சேலம் காடையம்பட்டியை சேர்ந்த வையாபுரி (39) உரிய ஆவணம் இன்றி ரூ.62 ஆயிரத்து 500 எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.2 லட்சம் பறிமுதல்

மண்ணச்சநல்லூர் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பறக்கும் படையினர் அவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரிடம் ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மிட்டாய் வியாபாரி

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெபக்குமார் இவர் கடலைமிட்டாய் வியாபாரம் செய்கிறார். இவர் நேற்று அதிகாலை திருச்சியிலிருந்து காரில் கரூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது பெட்டவைத்தலை சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். 

சோதனையில் அவர் உரிய ஆவணங்களின்றி காரில் வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

துறையூர்

துறையூரில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி குணசேகரன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்ட போது, ஒருவர் ஆவணங்கள் இன்றி ரூ.53 ஆயிரத்தை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், துணை தாசில்தார் ஜாபர் சாதிக்கிடம் ஒப்படைத்தனர்.

Next Story