பெட்டவாய்த்தலையில் சாலையோரம் கிடந்த ரூ.1 கோடி; சாக்கு மூட்டையுடன் வீசி சென்றது யார்?
பெட்டவாய்த்தலையில் சாலையோரம் சாக்குமூட்டையில் கட்டு, கட்டாக கேட்பாரற்று ரூ.1 கோடி கிடந்தது. அதை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை வீசிச்சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜீயபுரம்,
பெட்டவாய்த்தலையில் சாலையோரம் சாக்குமூட்டையில் கட்டு, கட்டாக கேட்பாரற்று ரூ.1 கோடி கிடந்தது. அதை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை வீசிச்சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் வந்தவர்கள் தகராறு
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 55), சத்தியராஜா(43), ஜெயசீலன்(46), சிவக்குமார்(36). இவர்கள் ஒரு காரில் திருச்சியில் இருந்து முசிறிக்கு பெட்டவாய்த்தலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெட்டவாய்த்தலையில் சாலையோரம் 2 கார்களில் வந்தவர்கள், காரில் இருந்து இறங்கி தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் ரவிச்சந்திரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
போலீசார் ரோந்து
அப்போது அந்த வழியாக போலீஸ் ரோந்து வாகனம் வந்துள்ளது. அதைப்பார்த்ததும், தகராறு செய்து கொண்டிருந்தவர்கள், உடனே காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அதே நேரம் போலீசார், அங்கு வந்து, என்ன நடந்தது என்று விசாரணை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவா்கள் தகராறு செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு அரிசி சாக்கு மூட்டை கிடந்துள்ளது. இதைப்பார்த்த ரவிச்சந்திரன் உடனே போலீசாரிடம் அதை கூறியுள்ளார்.
கட்டு, கட்டாக பணம்
அந்த மூட்டையை பிரித்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அதில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை எண்ணிப்பார்த்த போது ரூ.1 கோடி இருந்தது. உடனே இதுபற்றி ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தி, அந்த பணத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அத்துடன், பணத்தை கண்டெடுத்த போது அங்கு காரில் இருந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு வரவழைத்து, அந்த பணத்துக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி வாங்கினார்கள்.
வீசி சென்றது யார்?
மேலும் அதை வீசி சென்றவர்கள் யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story