போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் ரூ.5 லட்சம் திருட்டு- பிடிபட்டவரிடம் தென்காசி போலீசார் விசாரணை


போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் ரூ.5 லட்சம் திருட்டு- பிடிபட்டவரிடம் தென்காசி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 March 2021 3:02 AM IST (Updated: 24 March 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் ரூ.5 லட்சம் திருடியவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி, மார்ச்:
தென் மாவட்டங்களில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்தவரிடம் தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நூதன மோசடி

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 40). இவர் கட்டிட கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் இவரது மனைவி பரமேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் பரிவர்த்தனை செய்து வருவது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி தென்காசியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அவருக்கு உதவுவதாக கூறி பணத்தை எடுத்துக் கொடுக்க முயற்சி செய்வது போன்று நடித்துள்ளார். கருப்பையாவும் அவரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர் கருப்பையாவின் கையில் வேறு ஒரு போலி கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு கருப்பையாவின் கார்டுடன் சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் கருப்பையாவின் செல்போனுக்கு ரூ.17 ஆயிரத்து 200 அவரது வங்கி கணக்கில் இருந்து குறைந்து இருப்பதாக மெசேஜ் வந்தது. இதைத்தொடர்ந்து கருப்பையா வங்கிக்கு சென்று கேட்டபோது அவர் கையில் வைத்திருந்தது போலி கார்டு என தெரியவந்தது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பல இடங்களில் திருட்டு

இந்த நிலையில் போடிநாயக்கனூர் ஜெ.என்.பட்டியைச் சேர்ந்த காமராஜ் மகன் தம்பிராஜ் (வயது 44) என்பவரை திருமங்கலம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்த தென்காசி போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன் தம்பி ராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தென்காசி கருப்பையாவிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது தம்பிராஜ் இதேபோன்று மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி போன்ற பல மாவட்டங்களில் ஏ.டி.எம். மையங்களில் மோசடி செய்தது குறித்து கூறினார்.

வாக்குமூலம்

இந்த மோசடி குறித்து தம்பி ராஜ் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தம்பிராஜ் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கையில் சுமார் 5 ஆயிரம் வைத்துக்கொண்டு பணம் போடுவது போன்று நிற்பார். அப்போது அங்கு வரும் பொதுமக்களில் சிலர் பணம் எடுக்க தெரியாமல் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உதவுவது போன்று அவர்களது ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி எந்திரத்தில் வைத்துவிட்டு ரகசிய பின் நம்பரை கேட்பார். அவர்கள் அதை கொடுத்ததும் தவறாக எந்திரத்தில் பரிவர்த்தனையை செய்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறுவார். பின்னர் அவர்களிடம் அவர்கள் கொடுத்த கார்டை கொடுப்பதற்கு பதிலாக வேறு போலி கார்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு நெட்வொர்க் சரியில்லை என்று கூறிவிட்டு சென்று விடுவார். ஏ.டி.எம். கார்டை அவர்களுக்கு தெரியாமலேயே மாற்றி கொடுப்பது தம்பி ராஜின் சாதுர்யம்.
இவ்வாறு 21 பேரிடம் தம்பிராஜ் மோசடி செய்து ரூ.5 லட்சம் வரை திருடி உள்ளார். அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதுபோன்று ஏ.டி.எம் கார்டுகள் மூலம் பணத்தை இழந்தவர்கள் அந்தந்த போலீசில் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story