பொதுமக்கள் வைத்த அறிவிப்பு பதாகையால் பரபரப்பு
அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி பொதுமக்கள் வைத்த அறிவிப்பு பதாகையால் பரபரப்பு
வீரபாண்டி
திருப்பூர் மங்கலம் ரோடு, 60 வது வார்டுக்குட்பட்ட கோழிப்பண்ணை மற்றும் பிருந்தாவன் அவென்யூ, சி.பி.அவென்யூ, செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி, மழை நீர் வடிகால் வசதி ஆகியவைகள் முறையாக செய்யப்படவில்லை. இதனை சரி செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு, என்ற தலைப்புடன் அப்பகுதி பொதுமக்களின் சார்பாக கோழிப்பண்ணை பஸ் நிறுத்தப்பகுதியில் கோரிக்கைகள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடந்த மூன்று வருடங்களாக இப் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை, குடிநீர் 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே விடப்படுகிறது. தார்ச்சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு என பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால், பல போராட்டங்களை நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளோம் என்றனர். இந்த பதாகையால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story