சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து- ஈரோடு ஆர்.டி.ஓ. உத்தரவு
சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டத்தை ரத்து செய்து ஈரோடு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார்.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டத்தை ரத்து செய்து ஈரோடு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார்.
பங்குனி தேரோட்டம்
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தினத்தன்று காலையில் தேர் வடம் பிடிக்கப்பட்டு தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக தேரை இழுத்து சென்று வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படும். பின்னர் அதே நாளில் மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படும்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் சென்னிமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆர்.டி.ஓவிடம் அனுமதி
பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் கடந்த தை மாதம் கட்டுப்பாடுகளுடன் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. அதேபோல் பங்குனி உத்திர தேரோட்டமும் நடத்த அரசு அனுமதி வழங்கும் என பக்தர்கள் நினைத்து கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நாளை முதல் 30-ந் தேதி வரை 6 நாட்கள் பங்குனி உத்திர திருவிழாவை நடத்த வேண்டி சென்னிமலை கோவில் நிர்வாகம் சார்பில் ஈரோடு ஆர்.டி.ஓ.விடம் அனுமதி கோரப்பட்டது.
ரத்து
ஆனால் தற்போதைய சூழலில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி சென்னிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டத்தை தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளான பூஜைகள், சாமி தரிசனம் போன்ற நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுகளுடன் குறைவான பக்தர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என ஈரோடு ஆர்.டி.ஓ சி.சைபுதீன் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 28-ந் தேதி நடைபெறும் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் கட்டுப்பாடுகளுடன் குறைவான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story