ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தின் தன்மானத்தை பாதுகாக்கும் தேர்தல்-சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
நடைபெற உள்ள தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்தின் தன்மானத்தை பாதுகாக்கும் தேர்தல் என்று சேலத்தில் நடந்த பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலம்:
நடைபெற உள்ள தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்தின் தன்மானத்தை பாதுகாக்கும் தேர்தல் என்று சேலத்தில் நடந்த பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
சேலம் வடக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு தொகுதி வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், தெற்கு தொகுதி வேட்பாளர் ஏ.எஸ்.சரவணன், ஓமலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன்குமாரமங்கலம் ஆகியோரை ஆதரித்து சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நேற்று இரவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உங்களை தேடியும், நாடியும் வந்திருக்கிறேன். தேர்தலுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. எப்போதும், எந்த சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் உங்களோடு இருப்பவன் தான் இந்த ஸ்டாலின். ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் என்பது தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் ஆகும். இதனால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில்...
சேலம் மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதாவது, தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் சேலம் மாவட்டம் முதன்மையாக திகழும். அதற்கு காரணம் மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தான். இங்கு சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். சேலம் உருக்காலை, ரெயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், அரசு மகளிர் கலைக்கல்லூரி, மாநகராட்சி தனி குடிநீர் திட்டம், அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, ஏற்காடு தாவரவியல் பூங்கா, கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மேட்டூர் அனல் மின் நிலையம், நிறுத்தப்பட்டிருந்த சேலம் விமான சேவை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
ஆனால் முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த மாவட்டத்திற்கு ஏதாவது செய்தாரா?. அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார்? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர் படிப்படியாக இந்த பதவிக்கு வந்ததாக கூறுகிறார். அவர் படிப்படியாக வந்தாரா? அல்லது ஊர்ந்து, தவிழ்ந்து வந்தாரா? என்பது எல்லோருக்கும் தெரியும்.
சமூக நீதி
சேலம் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், தற்போது 10 ஆண்டுகளாக நடக்கிற அ.தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்கள் என்ன? என்பதை எடப்பாடி பழனிசாமியால் கூற முடியுமா?. பஸ்போர்ட், சேலத்தில் ரிங்கோடு, தலைவாசல் சந்தை விரிவாக்கம், ஓமலூரில் வாசனை திரவிய தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு, ஜவுளி பூங்கா, ராணுவ தளவாட மையம், செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டிற்கு மாற்று இடம் என அவர் கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றி இருக்கிறாரா? என்றால் கிடையாது.
சமீப நாட்களாக சமூக நீதியை பற்றி எடப்பாடி பழனிசாமி பேச தொடங்கி இருக்கிறார். அவர் என்ன சமூக நீதி காவலனா? அல்லது தலைவரா?. சமூக நீதி என்றால் அது தி.மு.க. அனைத்து சமுதாய மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. உதாரணத்திற்கு சிலவற்றை புள்ளி விவரத்தோடு கூறுகிறேன். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதம் உயர்வு, பட்டியலின மக்களுக்கு 14 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்வு, அதுவும் பட்டியலின மக்களில் பழங்குடியினருக்கு தனியாக 1 சதவீதம் ஒதுக்கீடு, மதம் மாறிய ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு, அருந்ததியருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு என அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி வழங்கியது தி.மு.க. ஆட்சியில் தான்.
கருணாநிதி பிறந்தநாளில்...
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகளை தெரிவித்துள்ளேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அது நிச்சயம் நிறைவேற்றப்படும். நாங்கள் சொல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்கள் அனைத்தும் ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படும். அதாவது மே 2-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதன்பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தநாளில் அவரது நினைவாக ஏழை குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகள் நடக்கிற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மற்றும் மத வெறியை தூண்டுகிறார்கள். இது திராவிட மண். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் பிறந்த மண் என்பதால் இங்கு பலிக்காது. தமிழகத்தை அடிமையாக்கி மத்திய பா.ஜ.க. அரசு ஆட்டி படைக்கிறது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமில்லை. தமிழகத்தின் சுய மரியாதையை காப்பற்றவும், தன்மானத்தை பாதுகாக்கவும், மாநில உரிமையை மீட்கவும் நடக்கிற தேர்தல் ஆகும். இதை தமிழக மக்கள் மறந்து விடக்கூடாது.
பா.ஜனதா நுழைந்து விடக்கூடாது
சேலம் மாவட்டம் மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் தான் நான் முதல்-அமைச்சராக வரமுடியும். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செல்லும் இடங்களில் மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கையில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அது உறுதியாக நடக்கும். எதிர்க்கட்சியே வரக்கூடாது.
அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள். பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களாக தான் இருப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்று இருக்கிறார். அவர் டெல்லியில் மோடியும், பா.ஜனதா கட்சியும் சொல்வதை தான் கேட்கிறார். தமிழகத்திற்குள் பா.ஜனதா நுழைந்து விடக்கூடாது. எனவே, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பிரசாரத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. உள்பட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story