அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் அரசின் சாதனைகளை கூறி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் - ஒரத்தநாடு வேட்பாளர் வைத்திலிங்கம் வேண்டுகோள்
அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று ஒரத்தநாடு வேட்பாளர் வைத்திலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் நேற்று தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு, வாளமர்கோட்டை, மடிகை, துறையூர், கண்டிதம்பட்டு, விளார், கொல்லாங்கரை, கொ.வல்லுண்டாம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.கவினர், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பித்த 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தார். அவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்ததின் நோக்கம் ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள், பலதரப்பட்ட மக்கள், சமுதாயத்தில் பின் தயங்கிய மக்கள் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அவர் முதல்-அமைச்சரான போது தன்னிறைவு திட்டத்தை கொண்டு வந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, மின்வசதி செய்து கொடுத்தார்.
ஜெயலலிதா காலம் தமிழகத்தின் பொற்காலம். நாடு முன்னேற கல்வி அறிவு அவசியம். இன்று தமிழகம் எல்லாதுறையிலும் முன்னேறி உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சாதனை செய்து உள்ளனர். நீட் தேர்வில் கிராமப்புறத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார். அதன் மூலம் கிராமப்புறத்தை சேர்ந்த 435 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களுடைய கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது.
அதே போல டெல்டா பகுதி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் நிலம் பாலைவனம் ஆகும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் முதல்-அமைச்சரிடம் கூறி, அவர் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். இது யாரும் செய்ய முடியாத சாதனை. விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12 ஆயிரத்து 140 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், விலையில்லா வாஷிங்மெஷின் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். நான் 15 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். இதில் 10 ஆண்டுகள் அமைச்சர். 2016-ல் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் என்னை ஜெயலலிதா எம்.பி. ஆக்கினார். காரணம் ஜெயலலிதா என்மீது வைத்த நம்பிக்கை. 20 ஆண்டு காலத்தில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளேன்.
தஞ்சை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்துள்ளேன். தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உள்ளேன். எனவே மேலும் பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். எனவே அ.தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக்கூறி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story