அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி


அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி
x
தினத்தந்தி 24 March 2021 3:18 AM GMT (Updated: 24 March 2021 3:18 AM GMT)

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என வேதாரண்யம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி அளித்தார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேற்று தலைஞாயிறு, வாட்டாகுடி, உம்பளச்சேரி, காடந்தேத்தி உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அவருக்கு வழிநெடுகிலும் அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து மாலை, சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குசேகரித்து பேசியதாவது:-

உங்கள் வீட்டில் திருமணம் செய்துகொடுக்க இருக்கும் பெண்களுக்கு தற்போதே மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்து வைத்து விடுங்கள். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் திருமணத்துக்கு பெண்களுக்கு தற்போது வழங்கப்படும உதவிதொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் மற்றும் பட்டுசேலை, மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டி, பெண்ணுக்கு கொலுசு உள்ளிட்ட அம்மா சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும்.

இனி இல்லத்தரசிகள் துணி துவைக்க வேண்டிய அவசியம் இல்லை மீண்டும் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வாஷிங்மெஷின், சூரிய ஒளியில் இயங்கும் மின் அடுப்பும் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் தேடி வரும். எனக்கு பிறகும் தமிழகத்தில் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி செய்யும் என ஜெயலலிதா அன்று கூறினார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் தற்போது அ.தி.மு.க.வை 3-வது முறையாக வெற்றி பெறச் செய்வோம். தமிழகத்தில் 3-வது முறை வெற்றி பெற்று அந்த வெற்றியினை ெஜயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங்குவோம் என்றார்.

நாலுவேதபதியில் வாக்கு சேகரிக்கும் போது கட்சி தொண்டர் ஒருவர் அமைச்சருக்கு டீ வழங்கினார். அதனை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில்  கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் டீ குடித்தார். அப்போது அவருடன் செல்போனில்  செல்பி எடுத்துக்கொண்டனர்.

தலைஞாயிறு காடந்தேத்தியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாக்கு சேகரித்தார். அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் இரட்டை இலை பதாகைகளை ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்து எங்களின் வாக்கு உங்களுக்கு தான் என உறுதியளித்தனர்.

கருப்பம்புலம் ஊராட்சியில் பல கட்சிகளில் இருந்து விலகி 100 மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது அவர்களுக்கு அமைச்சர் ஒ.எஸ். மணியன் சால்வை அணித்து வரவேற்றார்.

நாலுவேதபதி கிராமத்தில் வாக்குசேகரித்த போது, கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து அரசாணை நகலை அமைச்சர், வாக்காளர்களிடம் காண்பித்து அதை ஒலிபெருக்கியில் படிக்கும்படி அங்கு நின்ற கல்லூரி மாணவி ஒருவரிடம் கொடுத்தார். ஆங்கிலத்தில் இருந்த அரசாணையை மாணவி படிக்க அதை அமைச்சர் தமிழில் மொழி பெயர்த்து விளக்கினார்.

பிரசாரத்தின் போது வேதாரண்யம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர்கள் அவை பாலசுப்பிரமணியன், சவுரிராஜன், வேதாரண்யம் நகர செயலாளர் நமச்சிவாயம், தலைஞாயிறு பேரூர் செயலாளர் பிச்சையன் மற்றும் பாரதீய ஜனதா கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story