தஞ்சை மாநகரில் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்


தஞ்சை மாநகரில் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்
x
தினத்தந்தி 24 March 2021 8:53 AM IST (Updated: 24 March 2021 8:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகரில் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம் செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள 14-வது வார்டில் இருந்து நேற்று காலை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் 22, 15 ஆகிய வார்டுகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சை மேம்பாலம் பகுதி, இந்திராநகர், பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
மேலும் மேம்பாலம் பகுதியில் வீடு, வீடாக சென்றும் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் அறிவுடைநம்பியை பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். மாலையில் 16, 17, 25 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் அறிவுடைநம்பி பேசுகையில், என்னை வெற்றி பெற செய்தால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு, கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகர் பகுதிகளில் அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் மூலமாக விலையில்லாமல் வழங்கப்படும்.
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். இந்த தொகை குடும்பத்தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும்.

அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும். பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும். மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்க கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
நெற்களஞ்சியத்துக்கு அடுத்தபடியாக தஞ்சை மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இது தவிர நவக்கிரக தலங்களும் இந்த பகுதியில் உள்ளன. எனவே நவக்கிரக தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் வகையில் சிறப்பு பஸ்வசதியை ஏற்படுத்தி தருவேன்.

தஞ்சை மாநகரில் ஏராளமான தரைக்கடை வியாபாரிகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய இடவசதி இல்லாமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். எனவே தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்கள் வாழ்வில் முன்னேறும் வகையில் மாநகரில் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சி உதவியுடன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். எனவே தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளருடன் கோட்டை பகுதி அ.தி.மு.க. செயலாளர் புண்ணியமூர்த்தி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், வார்டு செயலாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் பூபதி, பா.ஜ.க நகர தலைவர் வெங்கசேடன், மாவட்ட பொருளார் விநாயகம், பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.வினர் உடன் சென்றனர்.

Next Story