கல்லூரி படிப்பை முடித்தவுடன் பட்டதாரிகளுக்கு ஒரு வருடம் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி


கல்லூரி படிப்பை முடித்தவுடன் பட்டதாரிகளுக்கு ஒரு வருடம் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி
x
தினத்தந்தி 24 March 2021 11:58 AM IST (Updated: 24 March 2021 11:58 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி படிப்பை முடித்தவுடன் பட்டதாரிகளுக்கு ஒரு வருடம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்.

கரூர், 

கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பிள்ளையார் கோவில் தெரு, சின்னகுளத்துப்பாளையம், பெரிய குளத்துப்பாளையம், ஜாமியா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு சிறுமி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெற்றியில் திலகமிட்டு வரவேற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் தொகுதி மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளேன். குறிப்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளேன். கொரோனா காலத்தில் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினேன். மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நேரில் சென்று நிதி உதவி வழங்கி உள்ளேன்.இதேபோல, அ.தி.மு.க. அரசு சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார். அதை நிச்சயம் செயல்படுத்துவார். அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் கரூரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி படிப்பு முடிந்து ஒரு வருடம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story