வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும்போது வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக கிராம மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு


வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும்போது வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக கிராம மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 March 2021 12:07 PM IST (Updated: 24 March 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும்போது வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை சிலவற்றுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

அவற்றில் ஈரான், ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்பட பல வெடிபொருட்கள் வெடி மருந்துகளுடன் கலந்து வந்திருப்பது தெரியவந்தது.

உரிய அனுமதியுடன் அவற்றை வெடித்து செயலிழக்க வைக்கும் பணியை கடந்த 20ந்தேதி முதல் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமச்சந்திராபுரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத வனத்துறைக்கு சொந்தமான காலி மைதானத்தில் ராணுவத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் போது அருகே மாநெல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் பலத்த அதிர்வுகள் ஏற்படுவதாகவும், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரும் பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் தலைமையில் ராமசந்திராபுரத்தில் பாதிரிவேடு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெடிபொருட்கள மேற்கண்ட பகுதியில் வெடித்து செயலிழக்க வைக்கும் பணியை நிறுத்திட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார், பேராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஒரு மனுவை தாசில்தார் அலுவலகத்தில் கொடுக்குமாறு போலீசார் கூறினர். வெடிபொருட்களை செயலிழக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் அனுமதியை பெற்றே இந்த பணி மீண்டும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கை விட்டனர்.

போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story