781 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா


781 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா
x
தினத்தந்தி 24 March 2021 5:46 PM IST (Updated: 24 March 2021 5:46 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 781 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி:
வாக்காளர்களுக்கு பணம்
தேனி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நேர்மையாக நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் கூடுதல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு, புகார்கள் கிடைக்கப்பெறும் இடங்களில் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். 

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள செயலியின் மூலம் பறக்கும் படையினர் எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம். 

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டாலோ பொதுமக்கள் எந்த நேரத்திலும் தயக்கமின்றி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம்.

‘வெப் கேமரா’
மொத்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 50 சதவீத வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா' பொருத்தி வாக்குப்பதிவை கண்காணிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இதில், 271 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 781 வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா' பொருத்தப்பட உள்ளது. 

மேலும், இணையதள தொடர்பு கிடைக்காத 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட உள்ளது.

அத்துடன் பதற்றமான 271 வாக்குச்சாவடிகளிலும் வங்கி அதிகாரிகள் நுண் பார்வையாளர்களாக பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

இந்த நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் தேர்தல் பார்வையாளர்களுக்கு தெரிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story