நாகூர் சில்லடி தர்கா அருகே மது கூடாரமாக மாறிய சிறுவர் பூங்கா அதிகாரிகள் கவனிப்பார்களா?


நாகூர் சில்லடி தர்கா அருகே மது கூடாரமாக மாறிய சிறுவர் பூங்கா அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 24 March 2021 7:58 PM IST (Updated: 24 March 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் சில்லடி தர்கா அருகே உள்ள சிறுவர் பூங்கா மது கூடாரமாக மாறி உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகூர்:-

நாகூர் சில்லடி தர்கா அருகே உள்ள சிறுவர் பூங்கா மது கூடாரமாக மாறி உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகூர் தர்கா

நாகையை அடுத்த நாகூரில் உலகப் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ஆன்மிக சுற்றுலா பயணிகள் நாகூர் தர்காவுக்கு வருவது உண்டு. 
நாகூர் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், நாகூர் கடற்கரை அருகில் உள்ள சில்லடி தர்காவிற்கும் செல்வது வழக்கம். இதனால் செல்லடி தர்காவிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த சில்லடி தர்கா அருகே நகராட்சி சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. 

பூங்காவில் புதர்கள்

தர்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவில் பொழுதை கழிப்பது வழக்கம். மேலும் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக சில்லடி பூங்கா இருந்து வந்தது. 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. பூங்காவில் அழகிய பூக்களுக்கு பதிலாக புதர்கள் முளைத்திருப்பது, இயற்கை ஆர்வலர்களை வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. பூங்காவில் உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களும் சேதம் அடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் பூங்காவுக்கு யாரும் செல்வதில்லை. 
பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை
பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கும் இந்த பூங்கா தற்போது மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறி உள்ளது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் இங்கு அதிகமாக கூடுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
இதை அதிகாரிகள் கவனித்து பூங்காவில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை அகற்றவும், விளையாட்டு சாதனங்களை புதுப்பித்து மீண்டும் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story