விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கும் பணி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடந்தது
கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கும் பணி
கடலூர்,
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை பிரித்து கணினி மூலம் ஒதுக்கும் பணி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடந்தது.
சட்டமன்ற தேர்தல்
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும், விருத்தாசலம் தொகுதியில் 29 வேட்பாளர்களும், நெய்வேலி தொகுயில் 12 வேட்பாளர்களும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும், கடலூர் தொகுதியில் 15 வேட்பாளர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 12 வேட்பாளர்களும், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்களும், சிதம்பரம் தொகுதியில் 11 வேட்பாளர்களும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 13 வேட்பாளர்களும் என மொத்தம் 136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே சின்னத்துடன் அமைக்க முடியும். அதற்கு கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில், வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க நேரிடும்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில், விருத்தாசலம் தொகுதியில் மட்டும் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் அந்த தொகுதிக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கணினி மூலம் ஒதுக்கீடு
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 282 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேவையான 426 வாக்குப்பதிவு எந்திரங்கள், 426 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 458 வி.வி.பேட் கருவிகளை கணினி மூலம் ஒதுக்கீடு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, தகவல் தொடர்பு அலுவலர் அருள்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஏகாம்பரம், தேர்தல் தாசில்தார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story