கரும்புஅரவைக்காக கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா


கரும்புஅரவைக்காக கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா
x
தினத்தந்தி 24 March 2021 11:14 PM IST (Updated: 24 March 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புஅரவைக்காக கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தது

உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புஅரவைக்காக கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தது.
 சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை  உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான கரும்பு உடுமலை மடத்துக்குளம் தாராபுரம, பல்லடம பழனி ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடம் இருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம, கணியூர் பழன, நெய்க்காரப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் ஒப்பந் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு ஆலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி 2021 ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்திற்கு 4,500 ஏக்கர் கன்னி கரும்பும் 1500ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 6ஆயிரம் ஏக்கர்கரும்பு பதிவு  செய்ய ஆலை நிர்வாகத்தால் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் 2 லட்சத்து 15 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யவும் திட்டமிடப்பட்டது.
1700 ஏக்கர் கரும்பு பதிவு
ஆனால் மழை குறைவு காரணமாக பல விவசாயிகள் கரும்பு நடவு செய்யவில்லை. அதனால் 2021ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 695 ஏக்கர் கன்னி கரும்பும், 1005ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 1700ஏக்கர் கரும்பு மட்டுமே பதிவாகியுள்ளது. இதன்மூலம் ஆலை அரவைக்கு சுமார் 71 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் கரும்பு விவசாயிகளை அணுகி ஒப்பந்தமில்லா கரும்புகளைப்பெறவும் ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் 2021ம்ஆண்டு கரும்பு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவையை அடுத்த மாதம்  9ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இளஞ்சூடு ஏற்றும் விழா
கரும்புஅரவைக்குஆலையை தயார்படுத்துவதற்காக ஆலையின் கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று  நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழாவிற்கு ஆலையின் மேலாண்மை இயக்குநர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமை தாங்கினார். விழாவில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தலைவர் சி.சண்முகவேலு, ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் காங்கேயம்பாளையம் சின்னப்பன் என்கிற எஸ்.பழனிசாமி, துணைத்தலைவர் என்.முத்துராமலிங்கம், ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர் ஏ.சுப்புராஜ், தொழிலாளர் நல அலுவலர் கே.கண்ணன், துணை தலைமைப்பொறியாளர் கே.மாரிமுத்து, துணை தலைமை ரசாயனர் வேணுகோபால் மற்றும் கரும்பு அலுவலர்கள் கரும்பு விவசாயிகள் அலுவலக ஊழியர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
 சம்பளம் நிலுவை
இந்த ஆலையில் ஊழியர்கள், களப்பணியாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் பருவகாலத்தொழிலாளர்கள் என மொத்தம் 250 பேர் உள்ளனர். இந்த ஆலைகடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் அந்தந்த மாதங்களில் வழங்கப்படுவதில்லை. காலம்கடந்தே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பலமுறை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியபிறகே சம்பளம் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது. 7வது மாதமும் முடிய உள்ளது.
தொழிலாளர்கள் முறையீடு
இந்த நிலையில் ஆலையில் நேற்று இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தபிறகு, தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள நிலுவைத்தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினர்.இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட பணமில்லை.பாலுக்கு பணம்தரவேண்டும். அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்க வேண்டும். கியாஸ் சிலிண்டர் வாங்கவேண்டும். ஆலைக்கு வேலைக்கு வந்து செல்ல போக்குவரத்து செலவுக்கு பணம் வேண்டும். எவ்வளவுதான் கடன்வாங்கி செலவு செய்யமுடியும்.கடன் கொடுத்தவர்களும் பணம்கேட்டு நெருக்குகிறார்கள் என்று முறையிட்டனர்.
அதற்கு நிர்வாகம் தரப்பில் பேசும்போது, ஆலையின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது.வங்கியில்பணம் தொடர்ந்து கேட்கப்பட்டுவருகிறது.
அடுத்தமாதம் 15ந் தேதிக்கு பிறகு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.பணம் வந்ததும் உடனடியாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். அதன்பிறகு மாதம் தோறும் சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.அதேசமயம் சம்பளம் நிலுவையால் தங்களது குடும்ப சூழ்நிலை குறித்து தொழிலாளர்கள் வேதனையுடன்எடுத்துரைத்தனர்.அவர்களிடம் கரும்பு பயிரிடுவோர் சங்க நிர்வாகிகள் ஆலையின் நிதிநிலைமையை எடுத்துக்கூறி, ஆலை அதிகாரிகள் அடுத்த மாதம் 15ந் தேதிக்குபிறகு பணம்வந்து விடும் என்றுள்ளார்கள்.அதனால் சிறிது பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். 

Next Story