விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் நகை அபேஸ்


விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம்  நகை அபேஸ்
x
தினத்தந்தி 24 March 2021 11:15 PM IST (Updated: 24 March 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் நகையை மா்ம மனிதா்கள் அபேஸ் செய்து சென்றுவிட்டனா்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா ஒரத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன் மனைவி லட்சுமி (வயது 58). இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தனது மகள் பிரேமலதாவை (32) பார்ப்பதற்காக ஒரத்தூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் வந்து இறங்கினார்.

பின்னர் அங்கிருந்து மகாராஜபுரத்திற்கு ஒரு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார். மகாராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஷேர் ஆட்டோவில் இருந்து லட்சுமி கீழே இறங்கி தான் வைத்திருந்த துணிப் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த ஆரம், வளையல்கள் என 6¾ பவுன் நகை காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

 லட்சுமி இறங்கிய சிறிது நேரத்தில் அந்த ஷேர் ஆட்டோவும் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றதால் நகை காணாமல் போன விஷயம் குறித்து யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்தார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுபற்றி லட்சுமி, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், ஷேர் ஆட்டோவில் தனது அருகில் அமர்ந்து பயணம் செய்த 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள்தான் நகையை அபேஸ் செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு நகையை அபேஸ் செய்த 2 பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story