விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக வரவழைக்கப்பட்ட வி.வி.பேட் கருவிகள் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு
விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக வரவழைக்கப்பட்ட வி.வி.பேட் கருவிகள் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகள் ஆகியவை கடந்த 10-ந் தேதியன்று சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 2,844 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 2,844-ம், வி.வி.பேட் கருவிகள் 3,034-ம் ஆக மொத்தம் 8,722 எண்ணிக்கையிலான எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த தொகுதியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வி.வி.பேட் கருவிகளை தொகுதிகளுக்கு அனுப்புதல்
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 150 எண்ணிக்கையில் வி.வி.பேட் கருவிகள் லாரி மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த கருவிகளை பரிசோதனை செய்யும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நேற்று காலை தேர்தல் ஆணையத்தின் சேமிப்பு கிடங்கை அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை திறந்து அந்த வி.வி.பேட் கருவிகளை பார்வையிட்டார். அதன் பின்னர் அந்த வி.வி.பேட் கருவிகள் விழுப்புரத்தில் இருந்து லாரி மூலமாக சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது.
145 கருவிகள்
அதாவது செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு 22 வி.வி.பேட் கருவிகளும், மயிலம் தொகுதிக்கு 18 வி.வி.பேட் கருவிகளும், திண்டிவனம் தொகுதிக்கு 19 கருவிகளும், வானூர் தொகுதிக்கு 20 கருவிகளும், விழுப்புரம் தொகுதிக்கு 25 கருவிகளும், விக்கிரவாண்டி தொகுதிக்கு 20 கருவிகளும், திருக்கோவிலூர் தொகுதிக்கு 21 கருவிகளும் ஆக மொத்தம் 145 வி.வி.பேட் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 25 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே விழுப்புரம் தொகுதிக்கென 888 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 444 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை தேர்தல் ஆணையத்தின் சேமிப்பு கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது கலெக்டருடன் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story