பஸ்- கார் நேருக்கு நேர் மோதல் 4 பேர் படுகாயம்


பஸ்- கார் நேருக்கு நேர் மோதல் 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 March 2021 11:40 PM IST (Updated: 24 March 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 85 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் படுகாயம்  அடைந்தனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 85 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 
பஸ்-கார் மோதல் 
கும்பகோணத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு  ஒரு தனியார் பஸ் 85 பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை வலங்கைமானை அடுத்த மாணிக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். தொழுவூர் காலனி அருகே மெயின் ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்தது. மன்னார்குடி சாலையில் கார் ஒன்று கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 
4 பேர் படுகாயம் 
இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த புலவர் நத்தம் குடியான தெருவை  சேர்ந்த திருஞானம் மகள் சுவாதி (13), குஞ்சிதபாதம் மகன் ராம்குமார் (வயது 22), குஞ்சிதபாதம் மனைவி பானு (50), குணசேகரன் (40) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு  உடனே  108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
85 பயணிகள் உயிர்தப்பினர்
இந்த விபத்தின் போது காரில் மோதிய தனியார் பஸ் அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. ஆனால் பஸ்சில் பயணம் செய்த 85 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதையடுத்து பஸ்சில் இருந்த 85 பேரை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டு மற்றொரு பஸ்சில் அவரவர்  சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story