மகராஜகடை அருகே யானை தாக்கி சிறுமி படுகாயம்
மகராஜகடை அருகே யானை தாக்கி சிறுமி படுகாயம் அடைந்தாள்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள குட்டிகவுண்டனூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் தர்ஷினி (வயது 14). சிறுமி வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாணவி தர்ஷினி வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை மாணவியை நோக்கி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து ஓட முயன்றார். துரத்தி சென்ற யானை, சிறுமியை தூக்கி வீசியது. மாணவியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது. யானை தாக்கியதில் காயம் அடைந்த தர்ஷினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த போது வலது காலில் முறிவு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஒற்றை யானை அந்த பகுதியிலேயே முகாமிட்டு இருப்பதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story