வாக்குச்சாவடி அலுவலர்களை 2 ம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி


வாக்குச்சாவடி அலுவலர்களை 2 ம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி
x
தினத்தந்தி 24 March 2021 11:47 PM IST (Updated: 24 March 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

3 தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களை 2 ம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளை என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் முதல் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

இந்த நிலையில் நேற்று 2-வது கட்டமாக வாக்குச்சாவடி அலுவலர்களை சுழற்சி முறையில் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி ஊட்டி கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.

தேர்தல் பொது பார்வையாளர்கள் சவ்ரவ் பஹரி (குன்னூர்), ராகுல் திவாரி (கூடலூர்), பனுதர் பெஹரா (ஊட்டி) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

வாக்குச்சாவடி அலுவலர்கள்

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் என 3 ஆயிரத்து 472 பேர் பணிபுரிகின்றனர். மேலும் கூடுதலாக 20 சதவீதம் என 696 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4,168 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதில் அவர்கள் எந்த தொகுதியில் பணிபுரிய உள்ளனர் என்ற ஒதுக்கீடு விவரம் தெரியவரும். அதுகுறித்த விவரம் நகல் எடுத்து சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

பயிற்சி

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பள்ளிகளில் 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடாமல் இருக்க, 3 இடங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. பயிற்சி குறித்த ஆணை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் நிர்மலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கலந்துகொண்டனர்.

Next Story