குடியாத்தத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கலா? பிரபல நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
குடியாத்தத்தில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
குடியாத்தம்
வருமான வரித்துறையினர் சோதனை
வேலூர் மாவட்டத்திலேயே குடியாத்தம் பகுதியில் தான் அதிக அளவு நகைக் கடைகள் உள்ளன. குறிப்பாக தாழையாத்தம் மற்றும் சந்தப்பேட்டை பஜாரில் ஏராளமான நகைக் கடைகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று மாலை வேலூரில் இருந்து வருமானவரித் துறையினர் குடியாத்தத்திற்கு வந்தனர். அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சந்தப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள இரண்டு பிரபல நகைக் கடைகளில் நுழைந்தனர்.
அங்கு இருந்த கடை உரிமையாளர்களிடம் விற்பனை மற்றும் இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து அந்த கடைகளில், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் ஏதாவது பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மாலை சுமார் 4 மணிக்கு வந்த வருமான வரித்துறையினர் இரவு 9 மணி வரை இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்று விட்டனர். இந்த வருமானவரி சோதனையால் அப்பகுதியில் உள்ள நகைக் கடை வியாபாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கலா?
இதனிடையே வருமான வரித்துறையினர் சோதனை செய்தது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பணம் அளிக்க உள்ளதாகவும், அதில் ஒரு குறிப்பிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க பல கோடி ரூபாயை குறிப்பிட்ட நகைக் கடைகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தேர்தல் கமிஷனுக்கும், வருமான வரித்துறையினருக்கும் கிடைத்த ரகசிய தகவலின் பேரிலேயே வருமான வரித்துறையினர், இந்த 2 பிரபலமான நகைக் கடைகளில் பல மணி நேரம் சோதனை செய்தனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த சோதனையில் எந்தவித பணமும் பிடிபடவில்லை. மேலும் கடையில் உள்ள விற்பனை மற்றும் இருப்பு குறித்த விவரங்கள் முழுவதும் சரியான முறையில் இருந்துள்ளது. இதனால் ஆய்வுக்கு வந்த வருமான வரித்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story