ஓட்டப்பந்தய வீரர் அனூப் சொந்த ஊரான குமரிக்கு வருகை


ஓட்டப்பந்தய வீரர் அனூப் சொந்த ஊரான குமரிக்கு வருகை
x
தினத்தந்தி 25 March 2021 12:20 AM IST (Updated: 25 March 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீரர் அனூப், தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது.

களியக்காவிளை:
சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீரர் அனூப், தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஓட்டப்பந்தய வீரர்
குமரி மாவட்டம் அண்டுகோடு ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவரான இவருடைய மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் அனூப் (வயது 19). ஓட்டப்போட்டியில் சிறந்து விளங்கிய இவர் மாவட்ட, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
சர்வதேச அளவில் சாதனை
பஞ்சாபில் நடைபெற்ற போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று முதல் பரிசாக தங்க பதக்கமும், அதன் பிறகு கோவாவில் நடந்த அகில இந்திய ஓட்டப்போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று தங்க பதக்கமும் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் சர்வதேச ஓட்டப்பந்தய போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. 
இதில் இந்தியா சார்பில் அனூப் கலந்து கொண்டு 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தங்க பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கமும் பெற்றார். சாதனை படைத்த பிறகு அனூப் முதன் முறையாக சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு நேற்று ரயில் மூலம் மார்த்தாண்டம் வந்தார்.
வரவேற்பு
அதை தொடர்ந்து அவருக்கு சொந்த ஊர் சார்பிலும், குமரி மாவட்டம் சார்பிலும் மேல்புறத்தில் செண்டை மேளம் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ரமேஷ் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story