அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் -  ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 24 March 2021 7:00 PM GMT (Updated: 24 March 2021 7:00 PM GMT)

அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை, மார்ச்.25-
அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி  எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி தெரிவித்தார்.
ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி. இவர் அ.தி.மு.க. பிளவுபட்ட போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அங்கு சிறிது காலம் இருந்த அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில், இவருக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினசபாபதி அ.தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் நிருபர்களிடமும் அந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
அ.தி.மு.க. பின்னடைவு
இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பணபலத்தை நம்பி நிற்கிறது. பணபலம் தற்போது எடுபடாது. பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்குதான் வாக்களிப்பார்கள். அ.ம.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்தால் மட்டுமே தி.மு.க.வை வெல்ல முடியும். அ.தி.மு.க. தற்போது பின் நோக்கி சென்று கொண்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க. விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பதவி ராஜினாமா
அ.தி.மு.க. பின்னடைவை நோக்கி செல்வதால்தான் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எங்களது தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.-அ.ம.மு.க. மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றுபட வேண்டும். எந்த நிபந்தனை விதிக்காமல் இருவரும் சேர்வதற்கு நான் முயற்சி எடுப்பேன். உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என்றுதான் கூறி வருகிறார். அவர் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.
 இந்த சூழ்நிலையில் இவர்களோடு பயணிக்க முடியாத காரணத்தால் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் அ.தி.மு.க.வை விட்டு விலகவில்லை. தொண்டனாகவே தற்போது இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story