சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை பெற திட்டமிட்டு அவதூறு பரப்பும் தி.மு.க. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை பெற திட்டமிட்டு அவதூறு பரப்பும் தி.மு.க. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 March 2021 1:36 AM IST (Updated: 25 March 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக திட்டமிட்டு தி.மு.க.வினர் அவதூறு பரப்புகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் பேசினார்.


திண்டுக்கல்:
திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு, தமிழகம் அமைதியாக திகழ்கிறது. இங்கு சட்டத்தின் ஆட்சி நிகழ்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வருவார்கள், யாரும் நிம்மதியாக வாழ முடியாது. பெண்கள் தனியாக போக முடியாது. கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகம் நடக்கும். மக்களின் சொத்துகளை தி.மு.க.வினர் பட்டா போட்டுக்கொள்வார்கள்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது நிலஅபகரிப்பு-மீட்பு போலீஸ் பிரிவு தொடங்கப்பட்டு, தி.மு.க.வினர் அப்பாவி மக்களிடம் கொள்ளையடித்த 14 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புரோட்டா, பிரியாணி கடைக்கு சென்று சாப்பிடுவார்கள். பணம் கேட்டால் உரிமையாளரின் மூக்கில் குத்துவார்கள். மறுநாள் கட்சியின் தலைவர் கடைக்கு சென்று மிரட்டுவார். எனவே, பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு மக்கள் துணை போக கூடாது.
தி.மு.க. அவதூறு 
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே. வேறு எந்த கட்சியும் இல்லை. முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் செல்ல ரூ.10 கோடி வழங்கப்படுகிறது. 
ஹஜ் செல்வோர் சென்னையில் தங்குவதற்கு ரூ.15 கோடியில் புனித இல்லம் கட்டப்படுகிறது. நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி, உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு இலவசமாக சந்தனக்கட்டைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. இவ்வாறு அ.தி.மு.க. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
ஆனால், தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, தி.மு.க. அவதூறு கருத்துகளை பரப்புகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று தி.மு.க. பொய் கூறுகிறது. நான் முதல்-அமைச்சராக இருந்த 4 ஆண்டுகளில் சாதி, மத சண்டைகள் எங்காவது நடந்ததா? இல்லை. 
அதேபோல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் சாதி, மத மோதலை அனுமதித்தது இல்லை. எனவே, தி.மு.க. திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது. அ.தி.மு.க. சிறுபான்மையினரின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறது.
பா.ஜனதாவுடன் கூட்டணி 
பா.ஜனதாவுக்கு அடிமையாக இருப்பதாக கூறுகிறார்கள். அ.தி.மு.க. என்றும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். திட்டங்களுக்கு அனுமதி, நிதியை மத்திய அரசு வழங்குகிறது. எனவே, மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துள்ளோம். 
அதனால் தான் தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தி.மு.க. போன்று மக்களை ஏமாற்றும் கட்சி, அ.தி.மு.க. இல்லை. பா.ஜனதாவுக்கு ஜால்ரா போடுவதாக தி.மு.க. கூறுகிறது. ஆனால், 1999 நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதாவுடன், தி.மு.க. பதவிக்காக கூட்டணி அமைத்தது.
 தி.மு.க.வுக்கு அதிகாரம், பதவி கொடுத்தால் பா.ஜனதா நல்ல கட்சி, பதவி கொடுக்கவில்லை என்றால் மோசமான கட்சி. தி.மு.க. ஒரு பச்சோந்தி கட்சி.
முரசொலிமாறன் உடல்நலம் பாதித்து ஓராண்டாக மருத்துவமனையில் இருந்த போதும், பா.ஜனதா கேபினட் மந்திரி பதவி கொடுத்தது.
அப்போது தி.மு.க.வுக்கு, பா.ஜனதா கட்சி மோசமாக தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் மோசமான கட்சியா?
திண்டுக்கல் பூட்டு 
மேலும் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ரூ.37 ஆயிரம் உதவித்தொகை, தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.5 கோடி வழங்கப்படுகிறது. 
எனவே, சிறுபான்மை மக்களை எப்போதும் பாதுகாக்கும் இயக்கம் அ.தி.மு.க. ஆகும். நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள், நியாயமான விலையில் நூல், விசைத்தறியை நவீனப்படுத்த ரூ.4 ஆயிரம் மானியம், மழைக்காலத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு தொழில் நலிவடைந்து வருகிறது. அதை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
அதேபோல் தோல் பதனிடும் தொழில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மேம்படுத்தப்படும். தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நத்தத்தில் முதல்-அமைச்சர் பிரசாரம்
நத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நத்தம் பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றி கூட்டணி. அ.தி.மு.க.வின் வெற்றி வேட்பாளர் நத்தம் விசுவநாதன். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள். 
இவர் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மேலும் மின்சாரம், ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர்.
நத்தம் தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்தவர். தொகுதியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. 
அ.தி.மு.க. ஆட்சியை குறைகூற வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அ.தி.மு.க. மீது சுமத்த குற்றச்சாட்டுகள் இல்லாததால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்படுகிறார். உண்மைக்கும் அவருக்கும் வெகுதூரம். இது அவருடைய அரசியல் நாடகம்.
மக்களை ஏமாற்றுகிறார்
மேலும் மு.க.ஸ்டாலின் ஒரு பெட்டியை ஊர் ஊராக கொண்டு சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதில் போட்டு 'சீல்' வைத்து, பூட்டு போடுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதில் உள்ள மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். மு.க.ஸ்டாலின் அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கு ஒரு சான்று உள்ளது. அதாவது, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக திண்டுக்கல் வந்த மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான இ.பெரியசாமிக்கு அந்த மேடையின் ஓரத்தில் இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அ.தி.மு.க.வில் இந்த நிலை இல்லை. இது குடும்ப கட்சியும் கிடையாது. கடின உழைப்பு உள்ள யாரும் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம். 
எனவே உங்கள் தொகுதி வேட்பாளர் நத்தம் விசுவநாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள். மீண்டும் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும், நத்தம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story