தடுப்பணையில் மூழ்கி அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலி
செந்துறை அருகே விளையாடியபோது தடுப்பணையில் மூழ்கி அக்காள்- தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செந்துறை:
அக்காள்கள்- தம்பி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(வயது 33). இவருடைய தம்பி ஜெயசீலன்(30). இவர்கள் அப்பகுதியில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். சுதாகருக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகள் சுடர்விழி(7). இதேபோல் ஜெயசீலனுக்கு சுருதி(9) என்ற மகளும், ரோகித்(6) என்ற மகனும் இருந்தனர்.
சுருதி குழுமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பும், சுடர்விழி, ரோகித் ஆகியோர் மணப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 3 பேரும் வீட்டில் இருந்து வந்தனர்.
ஓடையில் விளையாடினர்
இந்நிலையில் நேற்று மணப்பத்தூர் பகுதியில் சுதாகரின் தாய் வளர்மதி மாடு மேய்த்து கொண்டிருந்தார். அங்கு சென்ற சுருதி, ரோகித், சுடர்விழி ஆகிய 3 பேரும் தங்களுடைய பாட்டி மாடு மேய்ப்பதை பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் அங்குள்ள சின்ன ஓடையில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையின் ஒரு பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அரிப்பு ஏற்பட்டதில், அங்கிருந்த மரம் விழுந்து தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் தடுப்பணையையொட்டி உள்ள ஓடைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறியுள்ளது.
3 பேர் சாவு
நேற்று ஓடையில் விளையாடிய சுருதி உள்ளிட்ட 3 பேரும் தடுப்பணையில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தவறி விழுந்துள்ளனர். இதில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் விளையாட சென்ற குழந்தைகளை காணவில்லையே? என்று சுதாகர் அங்கு தேடி வந்தார். அப்போது அவரது மகள் சுடர்விழி தண்ணீரில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, தண்ணீரில் குதித்து மகளை தூக்கி உள்ளார். அப்போது அவரது தம்பி குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்துள்ளதை கண்டு கூச்சலிட்டார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் பிணமாக மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார், அங்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து செந்துறை தாசில்தார் குமரய்யா, அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் ஆகியோர், 3 பேர் மூழ்கி இறந்த தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள்கள் மற்றும் தம்பி என 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் மணப்பத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story