லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் சிக்கின. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மங்களமேடு:
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பெரம்பலூர் தொகுதியில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை வாலிகண்டபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலத்தில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அந்த லாரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சேலத்தில் இருந்து புகையிலை பொருட்களை குன்னம் வட்டம் வேப்பூர் அருகே உள்ள பரவாய் கிராமத்திற்கு கொண்டு செல்வதாகவும், அங்கு மர்ம நபர் ஒருவர் குட்கா பொருட்களை பெற்றுக்கொள்வார் என்றும், அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து லாரிடிரைவர் சேலத்தை சேர்ந்த அருள்குமாரை(வயது 29) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story