எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு


எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 25 March 2021 5:10 AM IST (Updated: 25 March 2021 5:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சேலம்:
சேலம் எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
எல்லைப்பிடாரி அம்மன் கோவில்
சேலம் குமாரசாமிபட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு இக்கோவில் திருவிழா கடந்த 16-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று பொங்கல் வைத்தல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோவில் அருகே பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று பக்தர்கள் பலர் விமான அலகு உள்ளிட்ட பல்வேறு விதமான அலகுகளை குத்திக்கொண்டு வந்தனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.
இன்று அக்னி குண்டம்
முன்னதாக நேற்று காலை அம்மனுக்கு கங்கணம் கட்டி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சக்தி பூங்கரத்துடன் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (வியாழக்கிழமை) மதியம் பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Next Story