ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 March 2021 11:43 PM GMT (Updated: 24 March 2021 11:43 PM GMT)

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
மாரியம்மன் கோவில்
ஊஞ்சலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தினமும் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். 
மேலும் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதுமட்டுமின்றி அம்மன் புறப்பாடு மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெற்று வந்தது. 
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் அங்கிருந்து அக்னி சட்டி எடுத்தும் அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். 
குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
இதையடுத்து மாலையில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி வேல் எடுத்து கோவிலில் குண்டம் உள்ள பகுதிக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட குண்டத்துக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் பூசாரியும், அவரை தொடர்ந்து திரளான பக்தர்களும் குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) தேர் திருவிழாவும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

Next Story