8 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
128 வேட்பாளர்கள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 926 இடங்களில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 4 ஆயிரத்து 757 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 454 கட்டுப்பாட்டு கருவிகள், 3 ஆயிரத்து 695 வி.வி.பேட் கருவிகள் என்கிற யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவிகள் ஏற்கனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர்கள் பட்டியல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள்
வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதேபோல் வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வி.வி.பேட் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே கூடுதல் எந்திரங்களை ஈரோடு ரெயில்வேகாலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் இருந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது.
இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார். தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் வாகனங்களில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 455 எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
Related Tags :
Next Story