வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜன் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு


வேட்பாளர் எஸ்.காந்திராஜனை கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்ற காட்சி.
x
வேட்பாளர் எஸ்.காந்திராஜனை கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்ற காட்சி.
தினத்தந்தி 25 March 2021 8:45 AM IST (Updated: 25 March 2021 8:48 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தீவிர வாக்கு சேகரிப்பு
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன், வடமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வாக்குசேகரித்தார். அதன்படி என்.பாறைப்பட்டி, குளத்தூர், சுந்தரபுரி, கொசவபட்டி, பாடியூர், தென்னம்பட்டி, பெரும்புள்ளி, ஜி.குரும்பபட்டி, கொல்லப்பட்டி என கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்துக்கு சென்ற அவருக்கு, பெண்கள் மற்றும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர். 

பிரசாரத்தின்போது தி.மு.க வேட்பாளர் எஸ்.காந்திராஜன் பேசியதாவது:

வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்தால் வடமதுரை ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். எதை செய்ய முடியுமோ?, அதனை மட்டுமே தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. தேர்தல் அறிக்கையில், அறிவிக்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும். 

வடமதுரையில் பஸ்நிலையம்
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், வருகிற ஜூன் மாதம் 3&ந்தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். 100 நாள் வேலை, 150 நாட்களாக உயர்த்தப்படும். தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும். நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும். வடமதுரை புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டப்படும். வடமதுரை மற்றும் அய்யலூரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். 

வடமதுரை குப்பை கிடங்குகள் ஊருக்கு வெளியே மாற்றப்படும். வடமதுரையில் பஸ் நிலையம் கட்டித்தரப்படும். அய்யலூரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும். எனவே நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் கரூர் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க. வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், வடமதுரை நகர செயலாளர் மெடிக்கல் கணேசன், அய்யலூர் நகர செயலாளர் கருப்பன், வடமதுரை வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜரத்தினம், சமூக ஆர்வலர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகி நம்பி என்ற நெப்போலியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story