‘சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்’; முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்


தேர்தல் பிரசாரத்தில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது ; அருகில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
தேர்தல் பிரசாரத்தில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது ; அருகில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தினத்தந்தி 25 March 2021 9:30 AM IST (Updated: 25 March 2021 9:35 AM IST)
t-max-icont-min-icon

‘சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்‘ என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

சிரிக்க வைத்து...
திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனை ஆதரித்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மணிக்கூண்டில் நேற்று பிரசாரம் செய்தார். வேனில் நின்றபடி திண்டுக்கல் சீனிவாசனுக்கு, முதல்அமைச்சர் ஆதரவு திரட்டினார். 

அப்போது அவர் பேசியதாவது: 
மரியாதைக்குரிய திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அனுபவம் வாய்ந்தவர். 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்துள்ளார். மேலும் திண்டுக்கல்லில் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகி வனத்துறை அமைச்சராக இருக்கிறார். பொன்மன செம்மல் புரட்சி தலைவர் காலத்தில் இருந்து அம்மா காலம் தொடர்ந்து தற்போது வரை பதவியில் இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன் ஒருவர் தான். திண்டுக்கல் சீனிவாசன் அருமையாக பேசுவார். அனைவரையும் சிரிக்க வைப்பார். சிந்திக்கவும் வைப்பார். மக்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவர். என்னை சந்திக்க வரும்போதெல்லாம் திண்டுக்கல் மக்களின் நலன் பற்றியே பேசுவார். மக்களின் மீது அக்கறை கொண்ட வெற்றி வேட்பாளர், திண்டுக்கல் சீனிவாசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திண்டுக்கல் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய அவருக்கு மற்றொரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுகொள்கிறேன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். 

மருத்துவ கல்லூரி
திண்டுக்கல் மாவட்டம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் கோட்டை ஆகும். புரட்சி தலைவர், அம்மா காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அதன்மூலம் திண்டுக்கல்லுக்கு பல்வேறு திட்டங்களை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்துள்ளார். திண்டுக்கல்லுக்கு அரசு மருத்துவ கல்லூரியை போராடி பெற்று தந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல்லில் ரூ.327 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மக்களுக்காக வாதாடி, போராடி மருத்துவ கல்லூரியை அவர் கொண்டு வந்துள்ளார். திண்டுக்கல் 
மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ரூ.70 கோடியில் திட்ட பணிகள், ரூ.14 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பாதாள சாக்கடை திட்டம்விரிவாக்கம் செய்யப்படும். அதேபோல் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு தொழில் நலிவடைந்து உள்ளது. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தோல் பதனிடும் தொழில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மேம்படுத்தப்படும். மாநகராட்சி குப்பை கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படும். சுற்றுச்சாலை அமைக்கப்படும். மேலும் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி முழுமையான வசதி செய்யப்படும். 

திண்டுக்கல்லில் மேலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேறுவதற்கு சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story