தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி: ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர், இளம்பெண்களுக்கு அரசுப்பணி; முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்றும், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர், இளம்பெண்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி அளித்தார்.
இ.பெரியசாமி பிரசாரம்
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அப்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணி, 150 நாட்களாக அதிகரிக்கப்படும். மேலும் இந்த திட்டம் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் வேலையிழந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அப்போது ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே தான் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரமும், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க உள்ளோம். இந்த திட்டங்கள் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உடனடியாக அமல்படுத்தப்படும்.
காலிப்பணியிடங்கள்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி கிறிஸ்தவ வன்னியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சலுகை கிடைக்க தி.மு.க. ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அரசு அலுவலகங்களில் 3 லட்சம் பணியிடங்களும், சுமார் 2 லட்சம் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த 5 லட்சம் காலிப்பணியிடங்கள் அனைத்தும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உடனடியாக நிரப்பப்படும். தற்போது
நேரடி நியமனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதால், அரசுப்பணி இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர், இளம்பெண்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும். மேலும் அரசு ஊழியர்கள் நலன்கருதி பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
அரசு கல்லூரிகள்
ஆத்தூர் தொகுதியில் அரசு விவசாய கல்லூரியும், அரசு கலைக்கல்லூரி யும், தொடங்கப்படும். தாடிக்கொம்பு அருகே லட்சுமணன்பட்டியில் குடகனாற்றின் குறுக்கே மதகு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து முதியவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தில் திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் சந்திரசேகரன், சுப.பெருமாள்சாமி, திண்டுக்கல் நகராட்சி முன்னாள் தலைவர் நடராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வீராசாமி, தாடிக்கொம்பு பேரூர் செயலாளர் நாகப்பன், அவைத்தலைவர் சுப்பையா, வட்டார காங்கிரஸ் தலைவர் தனபாலன், தாடிக்கொம்பு பேரூர் முன்னாள் செயலாளர் ராமலிங்கசாமி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜூ, இன்னாசி, திண்டுக்கல் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகோபால், மாவட்ட மீனவர் அணி
துணை அமைப்பாளர் முருகேசன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story