சட்டமன்ற தேர்தல் பணியில் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களை ஈடுபடுத்த ஏற்பாடு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்


சட்டமன்ற தேர்தல் பணியில் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களை ஈடுபடுத்த ஏற்பாடு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 25 March 2021 7:39 PM IST (Updated: 25 March 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் பணியில் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களை ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களை ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக கல்லூரிகளில் படித்து வரும் ஆர்வம் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட(என்.எஸ்.எஸ்.) அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இந்த பணியில் கலந்து கொள்ள எத்தனை மாணவர்கள் விருப்பத்துடன் உள்ளார்கள், அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்துதர வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அனுபவம்
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசும்போது, தேர்தல் பணியில் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் கலந்து கொள்ளும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் தபால் ஓட்டு வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் தேர்தலில் ஈடுபடும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடுவது என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். இன்றைய இளைஞர்கள்தான் வரும் காலங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்ற போகிறார்கள். ஆகவே இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 21 கல்லூரிகளை சேர்ந்த என்.எஸ்.எஸ். அலுவலர்கள், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றபிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story