கடலூர் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


கடலூர் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில்  பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 March 2021 8:24 PM IST (Updated: 25 March 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கடலூர், 

கடலூர் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2-ந் தேதி எண்ணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தனி, நெய்வேலி, திட்டக்குடி தனி, குறிஞ்சிப்பாடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு கடலூர் அரசு கல்லூரியும், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளுக்கு விருத்தாசலம் அரசு கல்லூரியும், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிகளுக்கு பு.முட்லூர் அரசு கல்லூரியும், நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளுக்கு பண்ருட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியும் வாக்கு எண்ணும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முன்னேற்பாடு பணிகள்

இந்த அனைத்து மையங்களிலும் முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையும், வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புக்கட்டை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த அறையை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் வலை அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, மருத்துவ குழுவினருடன் மருத்துவ அறைகளும் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. வாக்குகள் எண்ணும் இடம் மற்றும் அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி செய்வதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

கண்காணிப்பு கோபுரம்

அதுபோல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்களை மரப்பலகைகள் மூலம் மூடும் பணியும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் வாக்கு எண்ணும் மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும். மேலும் கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து வைத்ததும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வாக்கு எண்ணும் மையத்தின் நான்கு புறமும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியின் சுற்றுச்சுவர்கள் சுமார் 10 அடி உயரம் கொண்ட தகரத்திலான ஷீட் மூலம் உயரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story