பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஆதிவாசி உள்பட 2 பேர் பலி
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஆதிவாசி உள்பட 2 பேர் பலியானார்கள். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அடிக்கடி காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள தென்னை, வாழைகள் உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் உப்பட்டி அருகே உள்ள பெருங்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டு வந்தன. இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வரும் அபாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வனவர் பரமேஸ்வரன், வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் பெருங்கரை பகுதியை சேர்ந்த முத்துசாமி (வயது 63), ஏலமன்னா ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் சடயன் (52) ஆகியோர் கூலி வேலைக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வனப்பகுதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது புதர்மறைவில் நின்றுகொண்டிருந்த காட்டு யானைகள் திடீரென 2 பேரையும் துரத்தி தாக்க தொடங்கியது. இதற்கிடையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரும் அங்கு வந்து காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.
ஆனால் யானைகள் வனத்துறையினரையும் எதிர்த்து திரும்பி துரத்தியது. சிறிது நேரத்தில் காட்டு யானைகள் முத்துசாமி, சடயன் ஆகியோரை தாக்கி, தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன.
தொடர்ந்து மயங்கிய நிலையில் கிடந்த தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு, பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொளப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கி தந்தை-மகன் இறந்தபோது, பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் இதேபோல அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அமீர் அகமது ஜெய்சிங், இன்ஸ்பெக்டர்கள் திருஞானசம்பந்தம், ராஜகண்ணன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1 பகுதியைச் சேர்ந்த தந்தை-மகனையும், சேரம்பாடியில் கண்ணம்பள்ளியை சேர்ந்த முதியவரையும் காட்டு யானை தாக்கி கொன்றது. பின்னர் அந்த யானையை பிடித்து தெப்பக்காடு முகாமிக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story