வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு
தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நாளை நடக்கிறது.
தேனி:
வாக்குச்சாவடி அலுவலர்கள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலுக்காக தேனி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 492 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 21-ந்தேதி நடந்தது.
இதையடுத்து 2-வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, பெரியகுளம் தொகுதிக்கு தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி தொகுதிக்கு முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் தொகுதிக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
கலக்கல் முறையில் ஒதுக்கீடு
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க வாக்குச்சாவடி அலுவலர்களை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கணினி மூலம் கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இந்த பணி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
இதில், தேர்தல் பொது பார்வையாளர்கள் பிரபு டட்டா டேவிட்பிரதான், ரவீந்தர், தேர்தல் செலவின பார்வையாளர் கிலானி பாஷா, போலீஸ் துறைக்கான பார்வையாளர் டாவா ஷெர்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன்படி ஆண்டிப்பட்டியில் 1,864 பேர், பெரியகுளத்தில் 1,912 பேர், போடியில் 1,840 பேர், கம்பத்தில் 1,876 பேர் என மொத்தம் 7,492 பேர் தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏதுவாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், பயிற்சி வகுப்பு நடக்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, தேர்தல் பணியாளர்கள் தங்களின் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
Related Tags :
Next Story